அசர வைத்த இங்கிலாந்து, உலகக் கோப்பையை வென்றது

Posted By: Staff

கோல்கத்தா: வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல் என்ற பாடலைக் கேட்டிருப்போம். ஆனால், நேரில் பார்க்கும் வாய்ப்பு, 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கிடைத்தது. முதல் பாதியில் 2-0 என்று பின்தங்கியிருந்து 5-2 என்று கோப்பையை வென்றது இங்கிலாந்து.

17 வயதுக்குட்பட்டோருக்கான 17வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இந்தியாவில் நடந்தது. முதல் முறையாக இந்தப் போட்டியை நடத்தும் வாய்ப்புடன், விளையாடும் வாய்ப்பும் இந்தியாவுக்கு கிடைத்தது. தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்தாலும், மிகச் சிறப்பாக விளையாடி, உலக கால்பந்து மேப்பின் இந்தியாவின் பெயரையும் நமது வீரர்கள் இடம்பெறச் செய்துள்ளனர்.

இந்தியா உள்பட 24 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் பைனல்ஸ், கோல்கத்தாவில் நேற்று இடந்தது. ஐரோப்பாவைச் சேர்ந்த இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் மோதின. இரு ஐரோப்பிய அணிகள் உலகக் கோப்பையில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

முன்னிலை பெற்ற ஸ்பெயின்

முன்னிலை பெற்ற ஸ்பெயின்

ஆட்டம் துவங்கியதும், ஸ்பெயின் வீரர்கள், அதிரடியில் ஈடுபட்டனர். 10வது நிமிடத்தில் சீசர் பாஸ் செய்த பந்தை செர்ஜியோ கோமஸ் கோலாக்கி, அரங்கை அதிர வைத்தார். 31வது நிமிடத்தில் மற்றொரு கோலை கோமஸ் அடிக்க, ஸ்பெயின் 2-0 என்று முன்னிலை பெற்றிருந்தது.

எதிர்நீச்சல் போட்ட இங்கிலாந்து

எதிர்நீச்சல் போட்ட இங்கிலாந்து

முதல் பாதி முடிவடைய உள்ள நேரத்தில் ரியான் பிரூஸ்டர் முதல் கோல் அடிக்க, இங்கிலாந்து 2-1 என்று முன்னிலையைக் குறைத்தது. எதிர்நீச்சல் போட்ட இங்கிலாந்து, இரண்டாவது பாதி முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது. 58வது நிமிடத்தில் இங்கிலாந்தின் கிப்ஸ் ஒயிட் கோலடித்து சமநிலையை உருவாக்கினார். 69வது நிமிடத்தில் பிலிப் போடென் 3-2 என இங்கிலாந்துக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அதன் பிறகு இங்கிலாந்து மேலும் இரண்டு கோல்களை அடிக்க, டெங்குவை சமாளிக்க என்ன செய்வது என்று கையைப் பிசைந்து நிற்கும் தமிழக அரசு போல, ஸ்பெயின் வீர்ர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

பிரேசில் கோல்கீப்பருக்கு கவுரவம்

பிரேசில் கோல்கீப்பருக்கு கவுரவம்

இறுதியில் 5-0 என இங்கிலாந்து வென்று, முதல் முறையாக 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை முதல் முறையாக வென்றது. அந்த அணியின் ரியான் பிரூஸ்டர், 6 போட்டிகளில் 6 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்ததற்கான கோல்டன் ஷூவை வென்றார். பிலிப் போடென், மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கான கோல்டன் பால் பெற்றார். 20 கோல்களை தடுத்த பிரேசில் கோல் கீப்பர் கேப்ரியல் பிரேசோவுக்கு கோல்டன் கிளவுஸ் வழங்கப்பட்டது.

பிரேசிலுக்கு 3வது இடம்

பிரேசிலுக்கு 3வது இடம்

முன்னதாக மூன்றாவது இடத்துக்காக நடந்த ஆட்டத்தில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் மாலி அணியை வென்றது.
அடுத்த உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடு எது என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கென்யா, சிங்கப்பூர், ருவாண்டா ஆகியவை விருப்பம் தெரிவித்துள்ளன.

Story first published: Sunday, October 29, 2017, 15:03 [IST]
Other articles published on Oct 29, 2017
Please Wait while comments are loading...
POLLS