
மொராக்கோவுக்கு வாய்ப்பு?
இதனால் குரூப் எஃப் பிரிவில் உள்ள குரோஷியா - பெல்ஜியம் அணிகளுக்கும், கனடா - மொராக்கோ அணிகளுக்கும் ஒரே நேரத்தில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கனடா அணி 2 போட்டிகளில் தோல்வியடைந்ததால், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. ஆனால் மொராக்கோ அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இருந்தது.

தொடக்கமே அதிரடி
இந்த நிலையில் ஆட்டம் தொடங்கிய 4வது நிமிடத்திலேயே மொராக்கோ அணி முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. கனடா அணி செய்த தவறு காரணமாக ஜியேச் கோல் அடித்து அசத்தினார். இந்த அதிர்ச்சியில் இருந்து கனடா அணி மீள்வதற்குள் மோராக்கோ அணியின் யூசெஃப் அடுத்த கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் மொராக்கோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

மொராக்கோ அலட்சியம்
இதற்கு கனடா அணி பதிலடி கொடுக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மொராக்கோ அணி வீரர் அடித்த பந்து ஓன் கோலாக மாறியது. இதனால் ஆட்டத்தில் 2-1 என்ற நிலை உருவாகியது. தொடர்ந்து முதல் பாதி ஆட்ட நேரம் 2-1 என்ற கோல் கணக்கில் முடிவுக்கு வந்தது. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

கனடா அட்டாக்
இரண்டாம் பாதி ஆட்டத்தில் தொடக்கம் முதலே கனடா வீரர்கள் அட்டாக் செய்ய தொடங்கினர். இதன் பலனாக 71வது நிமிடத்தில் அந்த அணிக்கு ஃபிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் கோல் அடிக்கப்படவில்லை. தொடர்ந்து கிடைத்த கார்னர் வாய்ப்பில், கனடா அணியின் ஹோய்லெட் அடித்த ஹெட்டர், கிட்டத்தட்ட கோல் லைனை கடந்தது. ஆனால் முழுதாக கடக்காததால், கனடா அணிக்கு கோல் வழங்கப்படவில்லை. இதனால் மோராக்கோ அணி தொடர்ந்து முன்னிலையில் இருந்தது.

36 ஆண்டுகள்
பின்னர் இரண்டாம் பாதி ஆட்ட நேர முடிவிலும் கோல்கல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதன் மூலம் மொராக்கோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது. அதுமட்டுமல்லாமல் குரூப் எஃப் பிரிவில் முதலிடத்தில் இடம்பிடித்தது. இதன் மூலம் குரூஃப் எஃப் பிரிவில் மொராக்கோ மற்றும் குரோஷியா அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. மொராக்கோ அணி இரண்டாம் முறையாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு 36 ஆண்டுகளுக்கு பின் முன்னேறி சாதனை படைத்துள்ளது.