For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோஹ்லிக்காக ஒரு மரணம்.. வாய்க்கு வந்தபடி பேசிய வார்னே.. கெய்ல் புயல்...'பாரதரத்னா' சச்சின்...!

எல்லாத் துறைகளையும் போலவே 2013ம் ஆண்டு விளையாட்டுத் துறைக்கும் மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை பல சந்தோஷ சமாச்சாரங்கள் நிறைந்த ஆண்டும் இதுதான்.. ஐபிஎல் கிரிக்கெட் ஊழல் சாக்கடை வெடித்து வெளிக்கிளம்பி நாட்டையே நாறடித்த ஆண்டும் இதுதான்... சச்சின் டெண்டுல்கர் என்ற மகத்தான வீரரின் ஓய்வை கண்ட ஆண்டும் இதுதான்.

ஐபிஎல் ஊழல்தான் இந்த ஆண்டின் மிகப் பெரிய அசிங்கச் சம்பவமாக இந்திய விளையாட்டு உலகில் அமைந்தது.

இந்த ஆண்டில் இந்தியா மற்றும் உலகம் கண்ட சில விளையாட்டு நிகழ்வுகள்

கோஹ்லிக்காக ஒரு மரணம்

கோஹ்லிக்காக ஒரு மரணம்

போபாலில் பிஇ முதலாம் ஆண்டு படித்த 18 வயது மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தான் சாகும் முன்பு எழுதிய கடிதத்தில் கிரிக்கெட் வீரர் விராத் ஜோஹ்லி நன்றாக விளையாட வேண்டும் என்று எழுதி வைத்திருந்தார். இவர் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியின் தீவிர ரசிகையாவார்.

வாய்க்கு வந்தபடி பேசிய வார்னே

வாய்க்கு வந்தபடி பேசிய வார்னே

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகளின் சாமுவேல்ஸை மிக ஆபாசமாக விமர்சித்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி கேப்டன் வார்னேவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடினார் சாமுவேல்ஸ். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் வார்னே ஆவார்.

கடைசியாக ஒரு சதம்

கடைசியாக ஒரு சதம்

ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் முதல் முறையாக மும்பை அணிக்காக ரஞ்சிப் போட்டியில் ஆடிய சச்சின் டெண்டுல்கர் அபாரமான சதமடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். இது நடந்தது ஜனவரி 7ம் தேதி.

சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் தலைவரான சீனிவாசன்

சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் தலைவரான சீனிவாசன்

ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெயர் அடிபட்டதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து இடைக்காலமாக ஒதுங்கியிருந்த என்.சீனிவாசன், பின்னர் மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்றார். அதன் பின்னர் பலத்த சர்ச்சைக்கு மத்தியில் நடந்த வாரிய வருடாந்திர பொதுக்குழுவில் மீண்டும் அவர் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சச்சின் ஓய்வு

சச்சின் ஓய்வு

40 வயதான சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்றார். மும்பையில் நடந்த தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் அவர் கிரிக்கெட் வாழ்க்கைக்கு குட்பை சொன்னார். தனது மகன் விளையாடியதை முதல் முறையாகவும், கடைசி முறையாகவும் மைதானத்திற்கு வந்து பார்த்து மகிழ்ந்தார் சச்சினின் தாயார் ரஜினி.

24 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை

24 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை

24 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் சச்சின் படைக்காத சாதனைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு மகத்தான பங்களிப்பையும், முத்திரையையும் அவர் பதித்து விட்டுப் போயுள்ளார்.

34,357 ரன்கள்

34,357 ரன்கள்

200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு சர்வதேச டுவென்டி 20 போட்டியில் விளையாடி 34,357 ரன்களைக் குவித்துள்ளார் சச்சின்.

கொண்டாட்டத்துடன் டாட்டா காட்டிய ரசிகர்கள்

கொண்டாட்டத்துடன் டாட்டா காட்டிய ரசிகர்கள்

சச்சினின் ஓய்வை அவரது 199வது டெஸ்ட் போட்டியிலிருந்தே நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி உற்சாகத்துடனும், உணர்ச்சிப் பெருக்குடனும், கண்ணீர் கேவல்களுடனும் அனுபவித்து வழியனுப்பி வைத்தனர்.

ரகளையான ரபேல் நடால்

ரகளையான ரபேல் நடால்

டென்னிஸ் உலகில் நடால் முத்திரை பதித்த ஆண்டு இது. 2013ம் ஆண்டில் மட்டும் அவர் 10 பட்டங்களை வென்றார். அதில் அவரது 13வது கிராண்ட்ஸ்லாம் பட்டமும் அடங்கும். 2013ல் 60 வெற்றிகளையும், 3 தோல்விகளையும் கண்டிருந்தார் நடால்.

பெடரரின் சோகமும்.. சந்தோஷமும்

பெடரரின் சோகமும்.. சந்தோஷமும்

நடாலின் சக போட்டியாளரான ரோஜர் பெடரர் இந்த ஆண்டில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தினார். அதாவது தொடர்ந்து 36வது முறையாக ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியின் காலிறுதிக்குத் தகுதி பெற்றதே அது. விம்பிள்டனில் அதை செய்தார் பெடரர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக காலிறுதியோடு அவர் தோல்வியுற்று வெளியேறினார்.

கம்பீரை வம்புக்கிழுத்த கோஹ்லி

கம்பீரை வம்புக்கிழுத்த கோஹ்லி

ஐபிஎல் போட்டியின்போது கெளதம் கம்பீருக்கும், விராத் கோஹ்லிக்கும் இடையே ஏற்பட்ட வாய்ச்சண்டை பரபரப்பை ஏற்படுத்தியது. கோஹ்லி பெங்களூர் அணியின் கேப்டனாவார். கம்பீர், கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கேப்டன். இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியின்போது கம்பீரைப் பார்த்து கோஹ்லி கோபமாக எதையோ சொல்ல, கடுப்பான அவர் கோஹ்லியுடன் வாக்குவாதத்தில் இறங்கினார்.

மும்பை இந்தியன்ஸுக்கு ஐபிஎல் கோப்பை

மும்பை இந்தியன்ஸுக்கு ஐபிஎல் கோப்பை

சச்சின் டெண்டுல்கருக்கு சிறப்பான வழியனுப்பு விழாவாக அமைந்தது இந்த ஆண்டில் நடந்த ஐபிஎல் தொடர். இந்தத் தொடரை மும்பை இந்தியன்ஸ் வென்று சச்சினுக்கு அதை காணிக்கையாக செலுத்தியது. இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றது. இறுதிப் போட்டியில் மும்பை 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை எடுத்தது. பின்னர் விளையாடிய சென்னை 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை மட்டுமே எடுத்து வீழ்ந்தது.

வயசானாலும்.. பயஸின் 'ஸ்லாம்' மாறவே இல்லை...

வயசானாலும்.. பயஸின் 'ஸ்லாம்' மாறவே இல்லை...

கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற உலகின் வயதான டென்னிஸ் வீரர் என்ற பெருமையை இந்த ஆண்டு லியாண்டர் பயஸ் பெற்றார். 40 வயதான அவரும், 34 வயதான செக் நாட்டின் ரடெக் ஸ்டெபானக்கும் இணைந்து அமெரிக்க ஓபன் இரட்டையர் பட்டத்தை வென்றனர்.

இந்தியாவுக்கு சாம்பியன்ஸ் டிராபி...

இந்தியாவுக்கு சாம்பியன்ஸ் டிராபி...

இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியை இந்தியா படு ஸ்டைலாக ஆடி, பட்டத்தையும் வென்று அசத்தியது. எந்தப் போட்டியிலும் தோற்காத அணியாகவும் இந்தியா திகழ்ந்தது. இறுதிப் போட்டியில், இங்கிலாந்தை, இந்தியா வீழ்த்தி பட்டத்தைத் தட்டிச் சென்றது. இந்தியாவின் வெற்றிக்கு ஷிகார் தவன், ரவீந்திர ஜடேஜா, கேப்டன் டோணி ஆகியோர் முக்கியக் காரணமாக அமைந்தனர்.

'மெஸ்மரைஸிங்' மெஸ்ஸி!

'மெஸ்மரைஸிங்' மெஸ்ஸி!

அர்ஜென்டினா கால்பந்து அணியின் சூப்பர் ஸ்டார் வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு இந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக, அவருக்கு இந்த ஆண்டு உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருது கிடைத்தது. கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் சக வீரர் ஆண்டிரஸ் இனியஸ்டா ஆகியோரை பின்னுக்கு் தள்ளி இந்த விருதைப் பெற்றார் மெஸ்ஸி.

காதலியைச் சுட்டுக் கொன்ற 'பிளேட் ரன்னர்' பிஸ்டோரியஸ்

காதலியைச் சுட்டுக் கொன்ற 'பிளேட் ரன்னர்' பிஸ்டோரியஸ்

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிளேட் ரன்னர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட புகழ் பெற்ற ஆஸ்கர் பிஸ்டோரியஸ், தனது காதலியைச் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்டது அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது. இரு கால்களையும் இழந்தவர் பிஸ்டோரியஸ், உலக தடகள அரங்கில் மிக முக்கியமான வீரராகவும் திகழ்ந்தார். பிரிட்டோரியாவில் உள்ள இவரது வீட்டில் காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று கைதானார் பிஸ்டோரியஸ்.

ஆஸ்திரேலியாவைக் கூட்டி வந்து 'வெள்ளை'யடித்த இந்தியா

ஆஸ்திரேலியாவைக் கூட்டி வந்து 'வெள்ளை'யடித்த இந்தியா

இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரை இந்தியா 4-0 என்ற கணக்கில் அபாரமாக வென்றது. 43 வருட காலத்தில், ஒரு அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா இப்படி ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் தொடரைப் பறிகொடுத்தது இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்களுக்கு ரொம்ப சந்தோஷம்.

கெய்ல் புயல்...

கெய்ல் புயல்...

2013ம் ஆண்டின் ஐபிஎல் தொடரைக் கலக்கிய வீரர்களில் முக்கியமானவர் கிறிஸ் கெய்ல். பெங்களூர் அணிக்காக ஆடிய அவர், புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் சதம் போட்டு பயமுறுத்தி விட்டார். அதை விட மோசமாக, 66 பந்துகளில் 175 ரன்களைக் குவித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர வைத்தார். 17 சிக்ஸர்களையும், 13 பவுண்டரிகளையும் வெளுத்துத் தள்ளிய அவரிடம் சிக்கி புனே வீரர்கள் சின்னாபின்னமாகிப் போனார்கள்.

டோணியின் கலக்கல் ஆட்டம்

டோணியின் கலக்கல் ஆட்டம்

2013ம் ஆண்டை கேப்டன் டோணி மறக்கவே முடியாது. காரணம், பல முக்கியப் போட்டிகளில் டோணி கடைசி நேரத்தில் கை கொடுத்து அபாரமாக ஆடி இந்தியாவுக்கு வெற்றித் தேடித் தந்த ஆண்டு இது. குறிப்பாக இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை இடையிலான முத்தரப்புத் தொடரில் அசத்தி விட்டார் டோணி. அதிலும் இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசி ஓவரில் வெற்றிக்குத் தேவையான 16 ரன்களை அவர் எடுத்த விதம் அத்தனை பேரையும் சந்தோஷத்தின் உச்சிக்குக் கொண்டு போய் விட்டது. இதேபோலத்தான் 2011ல் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது இலங்கைக்கு எதிராக அதிரடியாக ஆடி 91 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார் டோணி என்பது நினைவிருக்கலாம்.

சாய்னாவின் அசத்தல் ஆட்டம்

சாய்னாவின் அசத்தல் ஆட்டம்

2013ம் ஆண்டு, இந்திய பேட்மிண்டன் துறைக்கு மறக்க முடியாத ஆண்டு. இந்த ஆண்டுதான் முதல் முறையாக இந்தியன் பேட்மிண்டன் லீக் தொடர் நடத்தப்பட்டது. முதல் போட்டித் தொடரை, சாய்னா நேஹ்வால் தலைமையிலான ஹைதராபாத் ஹாட்ஷாட்ஸ் அணி வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது.

இங்கிலாந்தின் கண்ணீரைத் துடைத்த ஆண்டி முர்ரே

இங்கிலாந்தின் கண்ணீரைத் துடைத்த ஆண்டி முர்ரே

77 ஆண்டு கால இங்கிலாந்தின் சோகத்தை மாற்றியமைத்தார் அந்த நாட்டு டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே. விம்பிள்டன் பட்டத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த எந்த ஒரு வீரரும் வெல்ல முடியாமல் இருந்த நிலையில், அதை மாற்றி இந்த ஆண்டு நடந்த ஆடவர் ஒற்றையர் விம்பிள்டன் பட்டத்தை முர்ரே வென்று புதிய வரலாறு படைத்தார். இறுதிப் போட்டியில் அவர் நோவாக் ஜோகோவிக்கை வீழ்த்தினார்.

'டோப்' அடித்தேன்... 'ஷாக்' கொடுத்த ஆர்ம்ஸ்டிராங்

'டோப்' அடித்தேன்... 'ஷாக்' கொடுத்த ஆர்ம்ஸ்டிராங்

உலகப் புகழ் பெற்ற சைக்கிள் பந்தய வீரரான லேன்ஸ் ஆர்ம்ஸ்டிராங், தான் ஊக்க மருந்து உட்கொண்டே பல சாம்பியன்ஷிப்புகளை வென்றதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பிரான்ஸில் நடந்த 7 தொடர்களில் தான் ஊக்க மருந்து உட்கொண்டதாக அவர் ஒப்புக் கொண்டார். பின்னர் இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

'பாரதரத்னா' சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்

'பாரதரத்னா' சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்தது. 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்ற சச்சினின் கிரிக்கெட் சாதனைகளையும், இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததையும் கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. பாரதரத்னா விருது பெறும் முதல் இந்திய விளையாட்டு வீரர் சச்சின்தான்.

சென்னையில் பரிதாபத் தோல்வி கண்ட ஆனந்த்

சென்னையில் பரிதாபத் தோல்வி கண்ட ஆனந்த்

சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், மிகப் பரிதாபமாக நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வியுற்றார். 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரான ஆனந்த், கார்ல்சனின் அபார ஆட்டத்திற்கு முன்பு கத்துக்குட்டி வீரரைப் போல சுணங்கி சுருண்டு போனது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த போட்டியில் ஒரு வெற்றியைக் கூட ஆனந்த் பெறவில்லை என்பது இன்னொரு ஆச்சரியம். செஸ் உலகின் புதிய சூரியனாக கார்ல்சன் உருவெடுத்த ஆண்டு 2013.

'பை பை சாக்கர்'... விடை பெற்ற பெக்காம்!

'பை பை சாக்கர்'... விடை பெற்ற பெக்காம்!

இங்கிலாந்து கால்பந்து சூப்பர் ஸ்டார் டேவிட் பெக்காம் தனது ஓய்வை அறிவித்தார். 38 வயதான உலக அளவில் பெரும் திரளான ரசிகர்களை வைத்துள்ள முன்னணி வீரர்களில் ஒருவரான பெக்காம், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார்.

Story first published: Wednesday, December 18, 2013, 15:19 [IST]
Other articles published on Dec 18, 2013
English summary
This is a compilation of the major sporting events of the year 2013.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X