டுவென்டி-20 உலக கோப்பை-டோணி தலைமையில் அணி

Posted By:

மும்பை: இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் டுவென்டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டோணி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2007ல் நடந்த முதல் உலக கோப்பை டுவென்டி-20 தொடரில் கேப்டன் டோணி தலைமையிலான இந்திய அணி பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பை வென்று சாதித்தது.

இந்நிலையில் இரண்டாவது டுவென்டி-20 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி இங்கிலாந்தில் துவங்க இருக்கிறது. இத்தொடரில் இந்திய அணி, வங்கதேசம், அயர்லாந்து ஆகியவற்றுடன் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது.

லீக் போட்டியின் முடிவில் ஒவ்வொரு பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறும். அதில் சிறப்பாக விளையாடும் 4 அணிகள் அரையிறுதியில் பங்கேற்கும். அதில் வெற்றிபெறும் அணிகள் வரும் ஜூன் 21 ம் தேதி நடக்கும் பைனலில் மோதுகின்றன.

வங்கதேசத்துடன் முதல் போட்டி...

இந்திய அணி 6ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் வங்கதேசத்தையும், 10ம் தேதி நடக்கும் இரண்டாவது லீக் போட்டியில் அயர்லாந்தையும் சந்திக்கிறது.

இந்நிலையில் இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கும் இந்திய அணிக்கு டோணி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

ஷேவாக், கம்பீர், ரெய்னா என முக்கிய வீரர்கள் அனைவரும் இடம்பிடித்துள்ளனர். கடந்த தொடரில் 6 பந்தில் 6 சிக்சர் விளாசிய யுவராஜூம் இவர்களுடன் கலக்க காத்திருக்கிறார். பந்துவீச்சில் ஜாகிர், இஷாந்தி, பிரவீண், ஹர்பஜன், இர்பான், யூசுப் பதான் என நட்சத்திர பட்டாளம் இருக்கிறது.

தற்போதைய ஐபிஎல் சீசன் 2ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இடம்பிடித்து அசத்தி வரும் ஆர்பி சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், முக்கிய பவுலரான முனாபின் பெயர் இடம்பெறவில்லை.

ஸ்ரீசாந்த், ஜோகிந்தர் இல்லை...

கடந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான பைனலில் கடைசி ஓவரில் மிஸ்பாவுக்கு பந்துவீசி அசத்திய ஜோகிந்தர் மற்றும் அவரை கேட்ச் பிடித்து அவுட்டாக்கிய ஸ்ரீசாந்த் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்களை தவிர்த்து கடந்த தொடரில் பங்கேற்ற ராபின் உத்தப்பா, அகார்கர், பியூஷ் சாவ்லா ஆகியோரும் இடம்பெறவில்லை.

தமிழகம் புறக்கணிப்பு...

அதேபோல் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உலக கோப்பை தொடருக்கான உத்தேச அணியில் இடம்பிடித்திருந்த தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், பத்ரிநாத், பாலாஜி, அஸ்வின் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தேர்வு குழு தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் இருக்கும் நிலையில் அணியில் தமிழர் ஒருவருக்கு கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

டுவென்டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி:

மகேந்திர சிங் டோணி, விரேந்தர் ஷேவாக், சுரேஷ் ரெய்னா, கெளதம் கம்பீர், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, பிரவீண் குமார், ரவிந்திர ஜடேஜா, யுவராஜ் சிங், ரோகித் சர்மா, யூசுப் பதான், இர்பான் பதான், ஆர்பி சிங், பிரக்யான் ஓஜா உள்ளிட்ட 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Story first published: Monday, May 4, 2009, 11:50 [IST]
Other articles published on May 4, 2009

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற