டோணியால் வென்ற தமிழ் தலைவாஸ்!

Posted By: Staff

சோனேபட்: கிரிக்கெட்டின் மிகச் சிறந்த பினிஷர் என்ற பெயரெடுத்தவர் தல டோணி. அதே நேரத்தில் கபடியில், கடைசி நேரத்தில் சொதப்பும் அணி என்ற பெயரெடுத்த தமிழ் தலைவாஸ். டோணியை நினைத்து விளையாடியதோ என்னவோ, நேற்று இரவு நடந்த பரபரப்பான ஆட்டத்தில், ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் வென்றது.

புரோ கபடி லீக் சீசன் 5 போட்டிகள், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கையில், எங்காத்துகாரரும் கச்சேரிக்கு போகிறார் என்ற அளவுக்கே தமிழ் தலைவாஸ் அணி விளையாடிக் கொண்டிருந்தது. 9 போட்டிகளில், 1 வெற்றி, 6 தோல்வி, 2 டிராவுடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து கடைசி இருந்தது வந்தது சச்சின் டெண்டுல்கரின் தமிழ் தலைவாஸ் அணி.

Tamil Talaivas wins

உலகக் கோப்பையை வெல்வதற்கு உதவிய அஜய் தாக்குர் கேப்டனாக உள்ள தமிழ் தலைவாஸ், புரோ கபடி லீக் போட்டியில் முதல் முறையாக களமிறங்கினாலும், அதன் தொடர் தோல்விகளால், ரசிகர்கள் ஆர்வமிழந்து வந்தனர்.

நீட் தேர்வில் இருந்து கட்டாயம் விலக்கு வாங்கித் தருவோம் என்று கூறியே மாணவர்களை ஏமாற்றி கடைசி நேரத்தில் சொதப்பிய தமிழக அரசைப் போல, இதுவரை விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் கடைசி நேர சொதப்பல்களாலேயே தமிழ் தலைவாஸ் தோல்வியடைந்து வந்தது.

கிட்டத்தட்ட, 10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு, நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், யுபி யோத்தா அணியுடன் விளையாடியது. இந்தப் போட்டியிலும், தொடக்கத்தில் சில புள்ளிகளை எடுத்து வந்தாலும், ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை, யுபி யோத்தா அணியே முன்னிலையில் இருந்து வந்தது. முதல் பாதியின் இறுதியில் 18-12 என்ற கணக்கில் யுபி யோத்தா முன்னிலையில் இருந்தது.

ஆட்டத்தின் 38வது நிமிடத்தில், முதல் முறையாக 29-28 என தமிழ் தலைவாஸ் முன்னிலை பெற்றது. அதன்பிறகு இரு அணிகளும் பரபரப்பாக புள்ளிகளைப் பெற்றன.

கடந்த, 10 நாட்கள் கிடைத்த ஓய்வில், டோணியின் மேட்ச்களை தமிழ் தலைவாஸ் அணிக்கு, சச்சின் டெண்டுல்கர் போட்டுக் காட்டியிருப்பார் என்று தோன்றுகிறது. கடைசி நேரத்தில், அஜய் தாக்குர் அபாரமாக விளையாடி 34-33 என்று தமிழ் தலைவாஸ் வென்றது.

இந்த சீசனில், தமிழ் தலைவாஸ் அணி பெறும், 2வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே புள்ளிப் பட்டியலில் கடைசியில் இருப்பதால், தான் அடுத்து விளையாடும் 13 போட்டிகளில், 11ல் வென்றால் தான் பிளோப் சுற்றுக்கு நுழைய முடியும் என்ற நிலையில், நேற்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் வென்றுள்ளது.

Story first published: Thursday, September 14, 2017, 13:57 [IST]
Other articles published on Sep 14, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற