நான்ஜிங்: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு இந்தியாவின் சாய்னா நெஹ்வால், கிடாம்பி ஸ்ரீகாந்த், பிவி சிந்து, சாய் பிரனீத் முன்னேறியுள்ளனர்.
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங்கில் நடந்து வருகின்றது. மகளிர் ஒற்றையரில் சாய்னா நெஹ்வால் ஏற்கனவே மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இந்த நிலையில், இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 12-21, 21-14 என்ற செட்களில் ஸ்பெயினின் பாபிலோ அபியானை வென்றார். மூன்றாவது சுற்றில் மலேசியாவின் லியூ டாரனை சந்திக்கிறார் ஸ்ரீகாந்த்,
ஆடவர் ஒற்றையரில் நடந்த மற்றொரு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சாய் பிரனீத் 21-18, 21-11 என்ற செட்களில் ஸ்பெயின் லூயிஸ் என்ரிக் பெரீராவை வென்று, காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையரில் நடந்த மற்றொரு 2வது சுற்று ஆட்டத்தில் எச்.எஸ். பிரனாய் 21-8, 16-21, 15-21 என்ற செட்களில் கடுமையாக போராடி பிரேசிலின் ஓலிவீராவிடம் தோல்வியடைந்தார்.
மகளிர் ஒற்றையரில் முதல் சுற்றில் இருந்து இந்தியாவின் பிவி சிந்து, சாய்னா நெஹ்வால் ஆகியோருக்கு பை அளிக்கப்பட்டுள்ளது. 2-வது சுற்று ஆட்டத்தில் துருக்கியின் அலியா டெமிர்பாகை 21-17, 21-8 என்ற சுலப செட்களில் சாய்னா நெஹ்வால் வென்றார். மூன்றாவது சுற்றில் தாய்லாந்தின் ரட்ச்னோக் இனடோனை அவர் சந்திக்கிறார்.
மகளிர் ஒற்றையரில் நடந்த மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தோனேசியாவின் பிட்ரியானியை 21-14, 21-9 என்ற செட்களில் சுலபமாக வென்று, காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறினார் பி.வி. சிந்து.
ஆடவர் இரட்டையரில் மனு ஆத்ரி, பி. சுமீத் ரெட்டி ஜோடி, ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது. மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஜோடி இரண்டாவது சுற்றில் வெளியேறியது. அதே நேரத்தில் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ராங்கிரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.