ஹாட்ரிக் தங்கத்துக்கு மேரி கோம் தயார்… இந்தியாவுக்கு 11 பதக்கம் உறுதி!

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

சோபியா: பல்கேரியாவில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டியில் மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மேரி கோம் பைனலுக்கு முன்னேறினார். தொடர்ந்து மூன்று சர்வதேசப் போட்டிகளில் தங்கம் வெல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு 11 பதக்கங்கள் உறுதியாகி உள்ளது.

ஐரோப்பிய குத்துச்சண்டை போட்டியான, 69வது ஸ்டார்ன்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 94 மகளிர் மற்றும் 143 ஆண்கள் பங்கேற்கின்றனர்,

மகளிர் 48 கிலோ எடைப் பிரிவின் பைனலுக்கு இந்தியாவின் மேரி கோம் தகுதி பெற்றுள்ளார். ஐந்து முறை உலகச் சாம்பியன், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரான, சீனியர் மேரி கோம் கடந்த சில மாதங்களாகவே அசத்தி வருகிறார்.

கோமுக்கு ஹாட்ரிக் தங்கம்

கோமுக்கு ஹாட்ரிக் தங்கம்

ஆசிய சாம்பியன்ஷிப்பில் மற்றும் கடந்த மாதம் நடந்த இந்திய ஓபனில் தங்கம் வென்ற மேரி கோம், தொடர்ந்து மூன்றாவது தங்கத்தை வெல்வதற்கு தயாராக உள்ளார். நேற்று நடந்த அரை இறுதியில், சீனாவின் யூ ஜியாலியை வென்று மேரி கோம் பைனலுக்கு முன்னேறியுள்ளார்.

ஆண்கள் பிரிவில் 5 பதக்கம் உறுதி

ஆண்கள் பிரிவில் 5 பதக்கம் உறுதி

நேற்று நடந்த ஆட்டங்களில் வென்று, ஆடவர் 75 கிலோ எடைப் பிரிவின் அரை இறுதிக்கு விகாஸ் கிருஷண், 91 கிலோவுக்கு மேற்பட்டோர் பிரிவில் சதீஷ் குமார், 52 கிலோ எடைப் பிரிவில் கவுரவ் சோலங்கி ஆகியோர் முன்னேறினர்.

அமித் பங்கல்

அமித் பங்கல்

சமீபத்தில் நடந்த இந்திய ஓபனில் தங்கம் வென்ற அமித் பங்கல், 49 கிலோ எடைப் பிரிவிலும், கடந்த முறை பல்கேரிய போட்டியில் வெள்ளி வென்ற முகமது ஹூசாமுதீன், 56 கிலோ எடைப் பிரிவிலும் அரை இறுதிக்கு முன்னேறினர். இதன் மூலம், அரை இறுதிக்கு ஆடவர் பிரிவில் 5 பேர் முன்னேறி, 5 பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்

11 பதக்கம் உறுதி

11 பதக்கம் உறுதி

மகளிர் பிரிவில் மேரி கோமைத் தவிர, மேலும் ஐந்து பெண்கள் பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளனர். எல். சரிதா தேவி, 60 கிலோ எடைப் பிரிவிலும், 81 கிலோவுக்கு மேற்பட்டோர் பிரிவில் சீமா புனியா, 81 கிலோ எடைப் பிரிவில் பாக்யபதி கசாரி, ஸ்வீட்டி போரா 75 கிலோ எடைப் பிரிவு, மீனா குமாரி தேவி 54 கிலோ எடைப் பிரிவில் பதக்க வாய்ப்பு பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்த முறை, இந்தியாவுக்கு, 11 பதக்கங்கள் உறுதியாகி உள்ளது.

Story first published: Saturday, February 24, 2018, 12:04 [IST]
Other articles published on Feb 24, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற