For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அனல் பறக்கும் ஆஷஸ் 'கிரிக்கெட் போர்' ஆரம்பித்தது! இங்கிலாந்து முதலில் பேட்டிங்

By Veera Kumar

லண்டன்: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு நடுவேயான. வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. டாசி்ல் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்துள்ளது.

காடிப் நகர மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்கள் விபரம்: இங்கிலாந்து- ஆடம் லைத், அலிஸ்டர் குக் (கேப்டன்), கேரி பேலன்ஸ், இயான் பெல், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, ஸ்டூவர்ட் பிராட், மார்க் உட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

ஆஸ்திரேலியா- கிறிஸ் ரோஜர்ஸ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மைக்கேல் கிளார்க் (கேப்டன்), ஆடம் வோக்ஸ், ஷேன் வாட்சன், பிராட் ஹடின், மிட்சேல் ஜான்சன், மிட்சேல் ஸ்டார்க், ஜோஸ் ஹசில்வுட், நாதன் லியோன்.

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஷஸ். டி20 அவசர விளையாட்டுகளையும் விஞ்சும், பரபரப்பு இந்த டெஸ்ட் தொடருக்கு உண்டு. இதற்கு காரணம், இந்தியா-பாகிஸ்தான் போல, ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் ஆக்ரோஷம்தான்.

ஆஷஸ் பெயர் காரணம்

ஆஷஸ் பெயர் காரணம்

ஆஷஸ் என்றால் சாம்பல் என்று பொருள். அதைப்போய், ஏன் ஒரு கிரிக்கெட் தொடருக்கு வைத்தார்கள் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருக்கலாம். அந்த பெயர் சூட்டப்பட்ட கதை சுவாரசியமானது. 1882ல் இங்கிலாந்து வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஓவல் மைதானத்தில், நடந்த போட்டியில், டெஸ்ட் தொடரை வென்று தாயகம் திரும்பியது. அன்று முதல்தான் இந்த வார்த்தை பிரபலமானது.

பத்திரிகை சேட்டை

பத்திரிகை சேட்டை

கிரிக்கெட்டை 'கண்டுபிடித்த' இங்கிலாந்தை, அதன் சொந்த மண்ணில், ஆஸ்திரேலியா தோற்கடித்ததை ஜீரணிக்க முடியாத, அந்த நாட்டு ஆங்கில பத்திரிகை, 'தி ஸ்போர்டிங் டைம்ஸ்' அடுத்த நாள் ஒரு வித்தியாசமான விளம்பரம் வெளியிட்டது. அது கண்ணீர் அஞ்சலி விளம்பரம். "1882ம் ஆண்டு, ஆகஸ்ட் 29ம் தேதி, ஓவல் மைதானத்தில், இங்கிலாந்து கிரிக்கெட் மரணித்தது. உடல் எரியூட்டப்பட்டு, அதன் சாம்பல் (ஆஷஸ்) ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்படும்" என்பதுதான் அந்த விளம்பரம்.

ஆஷஸ் திரும்பியது

ஆஷஸ் திரும்பியது

இந்த விளம்பரம் இங்கிலாந்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. புறப்படும் முன்பு, "ஆஸ்திரேலியாவில் இருந்து நாங்கள் சாம்பலை திரும்ப கொண்டுவருகிறோம்" என்று கொக்கரித்துவிட்டு சென்றார் கேப்டன் இவோ ப்ளிக். சொன்னமாதிரியே டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தினார்.

ஜாடி சாம்பல்

ஜாடி சாம்பல்

அப்போது மெல்போர்னில் கூடியிருந்த சில பெண்கள் கலைநயத்துடன் செய்யப்பட்ட அழகிய சிறு ஜாடியை இவோ ப்ளிக்கிடம் நினைவு பரிசாக அளித்தனர். இங்கிலாந்து கிரிக்கெட்டின் சாம்பலை திரும்ப தருகிறோம் என்பதை குறிப்பிடும் வகையில், ஸ்டம்பின் மீது வைக்கப்படும் பெய்ல்சை எரித்து அதன் சாம்பலை அந்த ஜாடிக்குள் வைத்திருந்தனர். இப்படி சாம்பல் என்ற வார்த்தையை வைத்து விரோதம் பாராட்ட ஆரம்பித்துதான், இப்போதுவரை இரு அணிகளும் ஆக்ரோஷமாக அடித்துக்கொள்கின்றன.

சம பலம்

சம பலம்

இவ்விரு அணிகளும் நடுவே இதுவரை 68 ஆஷஸ் தொடர்கள் நடைபெற்றுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 32லும், இங்கிலாந்து 31லும் வெற்றி கண்டுள்ளன. 5 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. ஆஷஸ் உட்பட இவ்விரு அணிகளும் மொத்தம் 336 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 138 போட்டிகளிலும், இங்கிலாந்து 105 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 93 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

இன்று தொடக்கம்

இன்று தொடக்கம்

இந்நிலையில்தான், 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தின் கார்டிஃப்பில் இன்று தொடங்குகிறது. 2013-14-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி கண்ட இங்கிலாந்து 5 போட்டிகளிலும் தோற்று ‘ஒயிட் வாஷ்' ஆனது. அந்தத் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் அலாஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்த முறை களமிறங்குகிறது.

பலமான இங்கிலாந்து

பலமான இங்கிலாந்து

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமனில் முடித்த நிலையில், ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. 2015 ஆஷஸ் தொடரையும் பலமிகுந்த ஆஸ்திரேலியாவே வெல்லும் என கிரிக்கெட் நிபுணர்கள் கணித்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்தின் ஆட்டமும், அந்த அணி வீரர்களின் சிறந்த பார்மும் இப்போது கருத்தை மாற்றி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு நல்ல போட்டியை இங்கிலாந்து அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங் வலு

பேட்டிங் வலு

இங்கிலாந்து அணியின் கேப்டன் அலிஸ்டர் குக், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஆடம் லித் போன்ற பேட்ஸ்மேன்கள் முழு பார்மிலுள்ளனர். வேகப்பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஸ்டீவன் ஃபின், மார்க் உட் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

ஆஸி. பேட்டிங்

ஆஸி. பேட்டிங்

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கிற்கு டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் பக்கபலமாக இருப்பார்கள். சமீபகாலங்களில் மிகச்சிறப்பாக ஆடியிருக்கும் இவர்கள், ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும், இங்கிலாந்து பவுலர்களுக்கு கடும் சவாலாகவும் இருப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. கேப்டன் கிளார்க், ஷான் மார்ஷ், கிறிஸ் ரோஜர்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.

பந்து வீச்சு

பந்து வீச்சு

வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஜான்சன், ஜோஸ் ஹேஸில்வுட், கூட்டணி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக திகழும் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக, மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சை எதிர்கொள்ள இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் ஃபவாட் அஹமதுவை நம்பியுள்ளது ஆஸ்திரேலியா. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.

Story first published: Wednesday, July 8, 2015, 16:18 [IST]
Other articles published on Jul 8, 2015
English summary
England captain Alastair Cook has challenged his players to reignite the cricketing fervour of 2005 when the Ashes get under way in Cardiff on Wednesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X