டிஎஸ்பி ஆகிறார் ஹர்மன்பிரீத் கவுர்!

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, பஞ்சாப் போலீஸ் டிஎஸ்பியாக பொறுப்பேற்க உள்ளார் இந்திய மகளிர் கிரிக்கெட் டி-20 அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, கடந்தாண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியின் பைனல் வரை முன்னேறியது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த அரை இறுதி ஆட்டத்தில், ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் குவித்த ஹர்மன்பிரீத் கவுர், பலருடைய பாராட்டுகளையும் பெற்றார்.

Harmanpreet now DSP

அவருடைய சாதனையைப் பாராட்டும் வகையில், கடந்தாண்டு ஜூலையில் டிஎஸ்பி பதவி வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவித்தது. மேற்கு ரயில்வேயில் பணியாற்றி வந்த கவுர், அந்தப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், அவர் ரயில்வே பணியில் இருந்து விடுவிக்கப்படவில்லை.

விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் மேற்கு ரயில்வேயில் அலுவலக கண்காணிப்பாளர் பதவியில் கவுர் சேர்ந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, 5 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து விலகினால், ஐந்தாண்டுகளுக்கான சம்பளத்தை முழுமையாக செலுத்த வேண்டும்.

அவர், ரூ. 27 லட்சத்தை செலுத்தினால், பணியில் இருந்து விடுவிப்பதாக மேற்கு ரயில்வே கூறியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் கிடைக்காமல், பஞ்சாப் போலீஸில் டிஎஸ்பியாக பதவியேற்க முடியாத நிலையில் கவுர் இருந்தார். இது குறித்து பஞ்சாப் முதல்வருக்கு அவர் கடிதம் எழுதினார்.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங், மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி, பேசினார். அதன்படி, விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, ரயில்வே பணியில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தென்னாப்பிரிக்காவில் டி-20 போட்டித் தொடர் நடந்து வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற இந்தியா முன்னிலையில் உள்ளது. நாளை நடக்கும் கடைசி போட்டியில் வென்று தொடரை வெல்ல அணி தயாராக உள்ளது.

இந்த நிலையில், டிஎஸ்பி பதவியை ஏற்க இருந்த தடை நீங்கியுள்ளதால், கேப்டன் ஹர்மன்பிரீத் மகிழ்ச்சி அடைந்துள்ளார். பஞ்சாப் முதல்வர் மற்றும் ரயில்வே அமைச்சருக்கு, டுவிட்டரில் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, February 23, 2018, 11:46 [IST]
Other articles published on Feb 23, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற