மும்பை : தன்னோட எல்லையை விராட் கோலி எப்போதுமே மீறியதில்லை என்று அவரின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் அவுட்டானபோது ரசிகர்களை நோக்கி வாயை மூடுமாறு செய்கை செய்திருந்தார் விராட் கோலி. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விராட் கோலி தன்னுடைய கோபத்தை தான் வெளிப்படுத்தியதாகவும், கோபத்திற்கும் தவறான நடத்தைக்கும் வித்தியாசம் உள்ளதாகவும் ராஜ்குமார் ஷர்மா கூறியுள்ளார்.
நியூசிலாந்திற்கு எதிராக மூன்று தொடர்களில் இந்தியா மோதியுள்ளது. முதலில் விளையாடிய சர்வதேச டி20 தொடரின் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. சொந்த மண்ணில் மோசமாக தோற்ற நியூசிலாந்து அணியினர் இதையடுத்து சுதாரித்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் இந்தியாவுடன் மோதிய அடுத்தடுத்த சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்தியாவை மோசமாக ஓரம் கட்டினர்.
அவர்களின் திட்டமிட்ட பந்துவீச்சில் இந்திய அணியினர் சொற்ப ரன்களில் வெளியேறிய காட்சிகளை பார்க்க முடிந்தது. இரண்டாவதாக விளையாடிய சர்வதேச ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் இந்தியா படுதோல்வி அடைந்து ஒயிட்வாஷ் ஆனது. இதன்மூலம் டி20 தொடருக்கு இந்தியாவை பழிதீர்த்துக் கொண்ட நியூசிலாந்து அணி, அத்துடன் தன்னுடைய வேகத்தை நிறுத்திக் கொள்ளவில்லை.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்தியாவை தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கலங்கடித்தது. இரண்டு டெஸ்ட் போட்டிகளின் 4 இன்னிங்சிலும் இந்தியா சொற்ப ரன்களிலேயே வெளியேறி தோல்வி அடைந்துள்ளது. இந்த டெஸ்ட்தொடரில் விராட் கோலி மொத்தம் 38 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். மேலும் இந்த சுற்றுப்பயணத்தில் 218 ரன்களே மொத்தம் எடுத்துள்ளார்.
ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அவரது ஆட்டத்தில் அதிக ரன்களாக உள்ளது. இதனால் அவர் பீல்ட் அவுட் ஆகிவிட்டதாக ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதனால் மிகுந்த கோபத்திற்கு உள்ளான கோலி, முதல் போட்டியை அடுத்து அளித்த பேட்டியில், ஒரு போட்டியில் தோற்றால் எல்லாம் முடிந்துவிட்டதாகாது என்று தெரிவித்திருந்தார். இரண்டாவது போட்டியின் போது அவரது ஆக்ரோஷங்களை மைதானத்தில் காண முடிந்தது. எதிரணி கேப்டன் கேன் வில்லியம்சனின் அவுட்டின் போது, ரசிகர்களை நோக்கி வாயை மூடுமாறு அவர் சைகை காட்டியுள்ளது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, விராட் கோலி தன்னுடைய எல்லையை எப்போதுமே தாண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார். அவரின் ஆவேசத்தை அவர் மைதானத்தில் வெளிப்படுத்தியதாகவும், ஆவேசத்திற்கும் தவறான நடத்தைக்கும் வித்தியாசம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விராட் கோலியின் வேகம் சிறிதும் குறையவில்லை என்றும் அவர் அற்புதமான வீரர் என்றும் கூறியுள்ள ஷர்மா, அடுத்ததாக நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் புது வேகத்துடன் விராட் கோலி விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.