
முற்றுப் புள்ளி
முன்னதாக இந்திய அணி டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற வேண்டும் என முயற்சித்து தோல்விகளை சந்தித்து வந்தது. வங்கதேசம், இந்தியா அணிக்கு தோல்வி பயத்தை காட்டி அந்த பரிசோதனை முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

பலம் - பலவீனம்
டி20 போட்டிகளில் இந்திய அணியின் பலம் சேஸிங் தான். அதே சமயம், இந்திய அணியால் முதலில் பேட்டிங் செய்து வெற்றிகளை பெற முடியவில்லை. இந்த நிலையில், அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை வருவதால் அதற்கு இந்திய அணி தன்னை தயார் செய்ய முடிவு எடுத்தது.

பரிசோதனை
அதன் ஒரு கட்டமாக, இனி டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்வது என்ற முடிவை எடுத்தது. தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் இருந்து இந்த பரிசோதனை முயற்சியை தொடங்கியது இந்திய அணி.

தென்னாப்பிரிக்க டி20 தோல்வி
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா எளிதாக வெற்றி பெற்றது. அப்போதும் கேப்டன் கோலி தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

முதல் டி20 டாஸ்
அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டாலும், அவரும் அதே முடிவில் தான் இருந்தார். முதல் டி20யில் இந்தியா டாஸ் வெல்லாவிட்டாலும், வங்கதேசம் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.

இரண்டாவது தோல்வி
அப்போது ரோஹித் சர்மா, தாங்கள் டாஸ் வென்றாலும் பேட்டிங் தான் தேர்வு செய்திருப்போம் என்றார். அந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 148 ரன்கள் குவித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சிக்கலில் இந்திய அணி
முதல் போட்டியில் தோற்றதால் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இன்னும் ஒரு போட்டியில் தோற்றாலும் தொடரை இழக்கும் நிலையை அடைந்தது இந்திய அணி. இதுவரை இந்திய அணி இந்திய மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்ததே இல்லை.

ரோஹித் எடுத்த முடிவு
தொடரை வென்று காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்த கேப்டன் ரோஹித் சர்மா, டாஸ் வென்ற உடன் நேரடியாக பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி முதலில் பேட்டிங் தான் தேர்வு செய்வோம் என்ற பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டது.

என்ன சொன்னார் ரோஹித்?
ரோஹித் டாஸ் முடிவை அறிவித்த பின் பேசுகையில், நாங்கள் முதலில் பேட்டிங் ஆடுவதில் மோசமான ரெக்கார்டு வைத்துள்ளோம். ஆனாலும், கடந்த போட்டியில் இருந்து மாறுதலாக ஆட நினைக்கிறோம். முதலில் வெற்றி பெறுவது தான் முக்கியம் என்றார்.

தோல்வி பயத்தை காட்டிய வங்கதேசம்
வங்கதேசம், இந்திய அணிக்கு தோல்வி பயத்தை காட்டி இருக்கிறது என்பதே உண்மை. வங்கதேச தொடரை அடுத்தும் இந்தியா தன் பரிசோதனை முயற்சியை தொடருமா?