மும்பை: பிசிசிஐ அறிவித்த உள்ளூர் தொடருக்கான அட்டவணையில் உள்ள குளறுபடிகள் காரணமாக அதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. பதினாறு வயதுக்கு உட்பட்டவர்களுக்கான விஜய் மெர்ச்சன்ட் ட்ராபிக்கு இளம் வீரர்களை தயார் செய்ய போதிய கால அவகாசம் இல்லாததால், அட்டவணையை மாற்றி அமைக்குமாறு கேட்டு கடிதம் எழுதியுள்ளது கேரளா கிரிக்கெட் அமைப்பு.
பிசிசிஐ-இன் கிரிக்கெட் செயல்பாட்டுக்கான பொது மேலாளராக இருக்கும் சபா கரீம், மற்ற பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் கமிட்டிக்களை கலந்து ஆலோசிக்காமல் உள்ளூர் போட்டிகளுக்கான அட்டவணையை தயாரித்து வெளியிட்டு விட்டதாக கூறப்படுகிறது.
புதிதாக பத்து அணிகள், அதிக அவகாசமில்லாத வகையில் அடுத்தடுத்து வரும் தொடர்கள் என பல குழப்பங்களால் பல மாநில கிரிக்கெட் அமைப்புகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மும்பை கிரிக்கெட் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது கேரளா கிரிக்கெட் அமைப்பு, பதினாறு வயதுக்கு உட்பட்டவர்களுக்கான விஜய் மெர்ச்சன்ட் ட்ராபி தொடரை தள்ளி வைக்குமாறு சபா கரீமுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த தொடர் வழக்கத்தை விட இரண்டு மாதங்கள் முன்னதாக, அக்டோபர் மாதமே துவங்குகிறது. பதினாறு வயதுக்கு உட்பட்டவர்கள் அணிக்கு புதிய இளம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதிலிருந்து படிப்படியாக முன்னேறி பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட அணி, இருபத்தி மூன்று வயதுக்கு உட்பட்ட அணி மற்றும் மாநில அணிகளுக்கு தகுதி பெறுவார்கள். அதனால், புதிய வீரர்களை தேர்வு செய்ய மற்றும் பயிற்சியளிக்க போதிய அவகாசம் இல்லாத நிலையை இந்த புதிய அட்டவணை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் பற்றிய முன்னறிவிப்புகள் இல்லாத நிலையில், தற்போது பருவமழை காலமாக இருப்பதால் வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருவதாகக் கூறியுள்ளது கேரளா கிரிக்கெட் அமைப்பு.
ஏற்கனவே, வடகிழக்கு மாநில கிரிக்கெட் அணிகள் போதிய அவகாசம், நிதி, வீரர்கள், பயிற்சி மைதானங்கள் என எதுவும் இன்றி தடுமாறி வருகின்றன. கங்குலி தலைமையிலான டெக்னிகல் கமிட்டி உட்பட பிற அதிகாரிகள் அளித்த பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் இத்தனை குழப்பங்கள் வந்திருக்காது என கூறுகின்றனர்.
உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் பற்றிய குழப்பங்கள் இப்போதைக்கு தீராது என தெரிகிறது.